திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவில்களான சிவன் கோவில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோவிலில் நேற்று மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவிலிலும், அதன் உப கோவில்களிலும் திருப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தூண்டுகை விநாயகர் கோவிலில் கடந்த ஏப்.20-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கட்டமாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில், ஸ்ரீ அமிர்தகுண விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோவில்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
இதையொட்டி சிவன் கோவிலில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலா கர்ஷனம் நடைபெற்று கும்பம் யாகசாலையில் வைக்கப்பட்டு முதல் கால யாக பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4-ம் காலை யாக பூஜைகளாகி, காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதேபோல் வெயிலுகந்தம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜைகளும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4-ம் கால யாக சாலை பூஜைகளாகி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


