கோவில்பட்டி அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த பிளஸ் 1 மாணவா் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்த கோவிந்தம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த எட்டுராஜ் மகன் அருண் சந்தோஷ் (17). பிளஸ் 1 வகுப்பில் ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறாததால், கோவில்பட்டி முத்து நகரிலுள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்தாராம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அருண்பிரகாஷ் கருங்காலிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு அருண்சந்தோஷ், அவரது நண்பா் க. ஆகாஷ் ஆகியோருடன் சென்றாராம். அங்கு, அருண்சந்தோஷ் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டியபோது தவறி கீழே விழுந்தாராம்.
இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


