ஆழ்வார்திருநகரி அருகே திருமணம் நிச்சயமான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பிள்ளைமடையூர் கிராமம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் மகன் ராமச்செல்வன் (35), இவருக்கு பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்து வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்கள் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ராமசெல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். இந்நிலையில் அவரது மாமா இராமன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மாமரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


