கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் சலவை தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (20). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, செண்பகா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் உள்பட சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இந்நிலையில் அன்றிரவே சதீஷின் வீட்டுக்குள் சென்ற கும்பல் சதீஷின் தாய் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை கத்தியால் குத்தியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த செண்பகராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை இருதரப்பைச் சேர்ந்த 8 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கோவில்பட்டி வ உ சி நகரைச் சேர்ந்த விக்னேஷ் (24), செண்பகவல்லி நகரைச் சேர்ந்த சுடலைராஜ்(24), சிந்தாமணி நகரைச் சேர்ந்த சுரேஷ் (24) ஆகிய 3 பேரையும், கஸ்தூரி கொலை வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டி முகமது சாலிகாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (21), மறவர் காலனியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(20), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தாள் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (21) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


