தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் இன்று (02.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன் பேசும் போது, தெரிவித்ததாவது: தமிழர்தம் வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு விழுமியங்கள், வாழ்வியல் மதிப்புகளை நன்குணர்ந்து எதிர்கால சமுதாயம் ஏற்றமுறும் வகையில் இன்றைய மாணவர் தலைமுறை அறிவாற்றலைப் பெறவும், வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற்றிடும் வகையிலும் தரமான கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. சமூக, பொருளாதார, பாலின வேறுபாடுகளின்றி சமத்துவமான கல்வியைப் பெறும் சமுதாயமே உலகில் உன்னதம் எய்த முடியும் என்பதை நன்குணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதனை அடையும் நோக்கில் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலம் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, பள்ளி மாணவர்கள் பசியின்றி பள்ளிப்படிப்பை மகிழ்ச்சியாகத் தொடர முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம்தேடிக் கல்வி திட்டம், நம்பள்ளி நம்பெருமை, நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்கம், அனைத்துக் குழந்தைகளும் புரிந்து படிக்கவும், எழுதவும் மற்றும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்தவகையில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். இதில் குறிப்பாக, பள்ளி மாணவர்ளுக்கான இணை சீருடைகளை பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதற்குகிணங்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பள்ளிக்கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், சீருடைக்கான துணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு வழங்கப்பட்ட பின்னர் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மாணவர்களின் அளவுக்கு ஏற்றார்போல் தைத்துக்கொடுக்கப்படுகிறது, இந்த கல்வியாண்டிற்கான இரண்டு சீருடைகள் இன்றைக்கு முதல் நாளிலே வழங்கப்படுகிறது. தமிழகமெங்குமே உள்ள அத்தனை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 2 சீருடைகள் இன்றைக்கு வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக அடுத்த இரண்டு சீருடைகள் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது.
ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வீதம் தமிழ்நாடு அரசு நம்முடைய மாணவர்களின் நலனுக்காக வழங்கி வருகிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். குழந்தைகளுக்கு தேவையான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்கள் எல்லாமே இன்றையதினத்தில் எல்லா இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். சமுதாயத்தில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும், மாணவர்களுடைய ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட வேண்டும் அவர்களுக்கு தேவையான சத்துணவாக இருந்தாலும் சரி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக இருந்தாலும் சரி முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
அந்தவகையில், மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இன்றைக்கு கிட்டதட்ட 45,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இன்றைய மாணவர் தலைமுறை அறிவாற்றலைப் பெறவும், வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற்றிடும் வகையிலும் தரமான கல்வி பெறுவதை உறுதிசெய்யும் வகையில் எழில்மிகு தோற்றத்துடன்கூடிய பள்ளிக்கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர்தொழில்நுட்ப கணனி ஆய்வகம் அமைத்தல், மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு, வருங்கால மாணவர் சமுதாயம் அறிவாற்றல்மிக்க ஒரு ஆரோக்கியமான சமுதாயமாக வளரவேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.என்.பி. பூங்காவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள், தொகுப்பு புத்தகம் மற்றும் செயல்பாட்டு புத்தகம் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, மாமன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியர் (பொ) பத்மா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மாணவ – மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


