சாத்தான்குளம் அருகே பொதுச் சுவர் பிரச்சனையில் பெண்ணை கட்டையால் தாக்கி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள அம்பலச்சேரி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வ சுந்தரம் மனைவி சுயம்பு கனி என்ற எஸ்தர் (60). இவரது கணவரின் அண்ணன் தங்கப்பாண்டி (70) என்பவர் இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே வீட்டின் பொது சுவர் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தங்கபாண்டிக்கும் – சுயம்பு கனி என்ற எஸ்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி சுயம்புக் கனியை கட்டையால் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) நாககுமாரி சம்பவ இடத்திற்கு சென்று இவரது அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து தங்கபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


