தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பெட்டிக் கடைகளில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார், ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48) என்பவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்து சுமார் 360 கிராம் எடையுள்ள 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், ஏ.சண்முகபுரத்தில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட சுமார் 7 கிலோ எடையுள்ள 2,923 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அந்தக் கடையின் உரிமையாளர் கோட்டைசாமி (38) என்பவரை கைது செய்தனர்.
இதேபோன்று, தாளமுத்து நகர் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட சுமார் 3 கிலோ எடையுள்ள 2533 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அந்தக் கடையின் உரிமையாளர் பச்சையம்மாள்(59) என்பவரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


