தூத்துக்குடியில் காவல்துறை மீது ஒரு இளம்பெண் கூறிய குற்றச்சாட்டுகளை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர் என்ற இளம்பெண் அளித்த குற்றச்சாட்டுகளை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை முற்றிலும் மறுக்கிறது.
ஒரு பெண்ணின் புகாரை சரியாக விசாரணை செய்யாததோடு, அவருக்கு பாதுகாப்பும் வழங்காமல் தவறாக வழக்குபதிவு செய்ததாக சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவல்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முற்றிலும் நிராகரிக்கிறது. புகார்கள் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னணி: Sipcot காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது புகார்களை போலீசார் தகுந்த முறையில் கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறது மற்றும் பின்வரும் விளக்கங்களை அளிக்கிறது
குற்றச்சாட்டு 1: 24.12.2024 அன்று சங்கரப்பேரி ஜி.பி. காலனியை சேர்ந்த ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறியுள்ளார்.
மறுப்பு: அந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 18/24, u/s 75 BNS & Section 4 of TNPHW கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
குற்றச்சாட்டு 2: 29.01.2025 அன்று பிணையில் வெளியான குற்றவாளி தன்னை கத்தியால் மிரட்டியதாகவும், 11.02.2025 அன்று Sipcot காவல் நிலையத்தில் அளித்த புகார் பதியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மறுப்பு: அந்த புகாரின் அடிப்படையில் Sipcot காவல் நிலையத்தில் குற்ற எண் 165/2025, u/s. 329(4), 296(b), 109(1), 351(3)-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராமலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு மதுரை நீதிமன்ற கிளையின் உத்தரவின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது (CRL.OP(MD) 3369/2025, நாள்: 28.03.2025).
குற்றச்சாட்டு 3: பணியிடத்தில் விசாரணைக்காக ஆய்வாளர் ராமலட்சுமி வந்ததாக கூறியுள்ளார்.
மறுப்பு: அந்த அதிகாரி மேற்படி தனியார் நிறுவனத்திற்கு சென்று, மற்றொரு வழக்கு (குற்ற எண் 184/24, u/s. 341, 294(b), 307, 506(ii) IPC) தொடர்பாக குற்ற சம்பவ இடத்தில் விசாரணை செய்யும் நோக்கத்துடன் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் அந்தப் பெண்ணை விசாரணை செய்யவோ அவரது புகாரை விசாரிக்கவோ செல்லவில்லை.
குற்றச்சாட்டு 4: ஒரு காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்ததற்காக தன்னிடம் பழிவாங்கும் வகையில் பொய்யான வழக்கு (SC/ST தடுப்புச் சட்டத்தின் கீழ்) பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மறுப்பு: Sipcot காவல் நிலையத்தில் குற்ற எண் 357/2025, SC/ST தடுப்புச் சட்டம் பிரிவுகள் 3(1)(S) மற்றும் 3(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 17.03.2025 அன்று பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை செய்த பிறகு 13.04.2025 அன்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் மேற்படி பெண், காவல்துறை அதிகாரிக்கு எதிராக 21.04.2025 அன்று புகார் அளித்துள்ளார். எனவே, பொய்வழக்கு என்பது தவறான குற்றச்சாட்டு. FIR பதிவு 17.04.2025 அன்று நடந்துள்ளது. அதற்கு பிறகு தான் காவலர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு 5: ஒரு காவல்துறை அதிகாரி தான் கொடுத்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறுப்பு: ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்ட வழக்கை காவல் நிலையத்தில் வாபஸ் பெறும் சட்ட ஏற்பாடு இல்லை. எனவே இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் சட்டபூர்வமாக தவறானது.
குற்றச்சாட்டு 6: எதிர் தரப்பினரிடம் இருந்து பாதுகாப்பு கோரிய போதிலும் போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை.
மறுப்பு: மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவின்படி (CRL.OP(MD) 4450/2025), பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் ஆபத்தின் தன்மையை மதிப்பீடு செய்து சாட்சியர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த தகவல் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்திடம் 27.03.2025 அன்று தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு 7: காவல் அதிகாரிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அதே அதிகாரியிடம் விசாரிக்க அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறுப்பு: 21.04.2025 அன்று அந்தபெண் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரை அதே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு விசாரிக்க நியமிக்கப்பட்டார். எனவே அதே காவல்துறை அதிகாரி விசாரணை செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு தவறானது.
இதுதொடர்பாக கீழ்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
1. அந்த இளம்பெண் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. Sipcot PS குற்ற எண் 412/25, u/s. 74, 351(3) BNS மற்றும் 4 of TNPHW Act பிரிவின் கீழ், 05.05.2025 அன்று குற்றவாளிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. இருவரும் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை உருவாக்கி, பொது அமைதியை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், RDO, தூத்துக்குடி அவர்கள் முன்னிலையில் BNSS பிரிவு 126-ன் கீழ் 14.02.2025 அன்று விசாரணைக்குத் அழைக்கப்பட்டனர்.
4. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் CRL.OP(M.D) 4386/2025 வழக்கில் இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளார்.
5. தனியார் நிறுவன ஊழியர்களின் புகார்களில் நடுநிலையுடன் விசாரணை நடைபெற, முதலில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியை மாற்றி, 20.02.2025 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வை அதிகரிரயாக நியமிக்கப்பட்டார்.
6. Sipcot குற்ற எண் 357/2025 u/s. 3(1)(s) and 3(1) of the SC/ST (Prevention of Atrocities) Act, 1989 வழக்கில் அதிகாரி மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்ததால், தற்போதைய விசாரணை அதிகாரி தன்னை மேற்படி வழக்கில் விலக அனுமதி கோரியதால் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
7. இளம்பெண் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட எல்லா வழக்குகளின் விசாரணையை CBCID-க்கு மாற்றி விசாரிக்க மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இது செயல்முறையில் உள்ளது.
ஆகையால், இவ்விவரக்குறிப்பில் வழங்கப்பட்ட விளக்கங்களையும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு தவறான தகவல்களை பரப்பவேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


