தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், இம்மாவட்டத்தில் செயல்படும் 1505 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, இம்மையங்களில் 2 வயது முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் முறைசாரா முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். இதற்காக, அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பெற்றோர் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் தங்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இம்மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


