இரண்டாவது முறையாக ‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று திருச்செந்தூர் இளைஞர் சிவபாலன் சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்த லிங்கம் மகன் சிவபாலன் (22). புதுச்சேரியில் நடந்த 23 வயதுக்குள்பட்டவர்களுக்கான ஆணழகன் போட்டியில் பங்கேற்றார். இந்திய அளவில் 40 பேர் பங்கேற்ற இப்போட்டியில், ‘மிஸ்டர் இந்தியாவாக சிவபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே போல பெங்களுரில் நடந்த ஆணழகன் போட்டியில், மிஸ்டர் சவுத் இந்தியாவாகவும் வென்று சாதனை படைத்துள்ளார். பிடெக் பட்டதாரியான சிவபாலன், கடந்த 2023ஆம் ஆண்டும் மிஸ்டர் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஊருக்கு பெருமை சேர்த்த சிவபாலனை திருச்செந்தூர் பகுதி மக்கள் பாராட்டினர்.


