தூத்துக்குடி மாவட்டத்தில் குமரகுருபர சுவாமிகள் பெயரில் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்தன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் “ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் 17ஆம் நூற்றாண்டு வாழ்ந்த பெரும் தமிழ் புலவர். இவர் 14-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பரம் மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை, பண்டாரம் மும்மணி கோவை, காசிக்கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை, தில்லை சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை, கயிலைக் கலம்பகம், காசி துண்டி விநாயகர் பதிகம் உள்ளிட்ட நூல்களில் குமரகுருபரர் இயற்றியுள்ளார்.
இவர் சைவ நெறியை போற்றி தருமபுரம் ஆதீனத்துடன் தொடர்பு கொண்டு பல ஆண்டுகாலம் காசியில் வாழ்ந்தார். காசியில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி சைவத்தின் பெருமையை பரப்பினார். மேலும் காசியில் மடத்தை நிறுவி இறக்கும் வரை அங்கு தங்கி இருந்தார். குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து தவழ்ந்து ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரி ஆற்றங்கரையிலும், வைகை கங்கை ஆற்றங்கரையிலும், மடம் அமைத்து தமிழையும், சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.
இந்நிலையில் குமரகுருபரரின் 335வது குருபூஜை விழா அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டத்தில் ஜூன் 6ம் தேதி நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி அவரது நினைவு தபால் தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது. தமிழுக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய தமிழ் புலவரான குமரகுருபரருக்கு அவர் பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில் வருகிற 14.06.2025 சனிக்கிழமை ஸ்ரீஆதி குமரகுரபர சுவாமிகள் 337-வது ஆண்டு மாகேஸ்வர பூஜைத் திருநாள் நடைபெற இருக்கிறது. குமரகுருபரருக்கு ஸ்ரீவைகுண்டத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். குமரகுருபரர் பெயர் தாங்கி ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகியவை செயல்பட்டு வரும் நிலையில் குமரகுருபரர் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றையும் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளது
ஆகவே அவரது நினைவு தினத்தை மகேஸ்வர பூஜையாகக் கொண்டு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு நமது தமிழக பாடப் புத்தகத்தில் இயற்ற வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துனைதலைவர்கள் முத்துராமலிங்கம், சிவராமன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் சித்திரைவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, முன்னாள் மாவட்ட துனைதலைவர் பல்க்பெருமாள், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாலர் சீனிவாசன், ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, அலுவலக செயலாலர் இசக்கிமுத்து, தரவுதள மாவட்ட தலைவர் கலைசெல்வன், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், மேற்குமண்டல பொதுச்செயலாலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


