கோவில்பட்டியில் போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை டிஎஸ்பி ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜேசிஐ விக்டர் கிங்ஸ், பகடா ஸ்போட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி மணியாச்சி விலக்கில் உள்ள பகடா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இருந்து நேஷனல் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 500 பேர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியை, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கோவையைச் சேர்ந்த சதீஷ் முதலிடம், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணி, அருண்குமார் ஆகியோர் முiறையே 2,3 ஆவது இடத்தைப் பிடித்தனர். 3 பேருக்கும் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் பரிசளிக்கப்பட்டது.
4 முதல் 10-ஆவது இடம் பிடித்த 7 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கச் செயலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஜேசிஐ இந்தியா மண்டலத் தலைவர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஜேசிஐ மண்டல துணைத் தலைவர் பிரேம் பால்நாயகம், தொழிலதிபர் பி.ஆர். சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.


