தாமிரபரணியை தூய்மைப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை
டெல்லியில் முதல் -அமைச்சரிடம் ராபர்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்
தாமிரபரணியை தூய்மைப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்குமாறு திருநெல்வேலி தொகுதி எம்.பி.ராபர்ட் புரூஸ் டெல்லியில் நேற்று தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்.
நெல்லை மாவட்டத்தில் பாயும் புராண நதியான தாமிரபரணி நதி தற்போது மிகவும் மாசடைந்து உள்ளது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. நெல்லை தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் இதன் பேரில் சிறப்பு கவனம் செலுத்தி முயற்சிகள் மேற்கொண்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டின் நீதிபதிகள் நேரடியாக சென்று தாமிரபரணி நதியை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ராபர்ட் புரூஸ் எம்.பியும் உடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக குரல் எழுப்பினார். இது குறித்த ஒரு கேள்வியை அவர் முன்வைத்த போது, “தாமிரபரணியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக மாநில அரசு ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கினால் அதற்கான நிதி உதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படும் என எழுத்துப் பூர்வமாக பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி வந்து இருந்தார். அவரை ராபர்ட் பு ரூஸ் எம்.பி. நேரில் சந்தித்து தாமிரபரணியை சுத்தப்படுத்துவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை வலியுறுத்தி மனுவும் அளித்தார்.


