தூத்துக்குடியில் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கார் மோதி விபத்தில் இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லிங்கம்பட்டி கடலையூர் ரோட்டை சேர்ந்தவர் சோனைமுத்து. இவருடைய மகன் முருகன் (50). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் கட்டிட வேலைக்கு வந்தாராம். இவர் வேலை நடைபெறும் கட்டிடங்களிலேயே இரவில் தங்கி கொள்வாராம். சம்பவத்தன்று மாலையில் சம்பளம் வாங்கி விட்டு ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாராம்.
அதன்பிறகு அவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே தலையில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகன் மீது ஒரு கார் மோதி விபத்து ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக முருகன் இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


