திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த மைக்கேல் தேவராஜ் (50). இவர் ஈரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆம் தேதி மளிகை கடைக்கு மொத்த பொருட்கள் வாங்க பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் மைக்கேல் தேவராஜ் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மூலைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தேவராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிதத்தை அடுத்து இன்று அவரது வீட்டில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் கலந்து கொண்டு உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அரசு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஊர்மக்கள் மரியாதை செலுத்தினர்.


