நாலாட்டின்புத்தூர் அருகே தம்பதியர் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள மந்தித்தோப்பு துளசி நகரை சேர்ந்தவர் வீரன் (68). விவசாயி. இவருடைய மனைவி குருவம்மாள் (61). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் நாகம்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நெல்லை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூர் அருகே தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குருவம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


