தூத்துக்குடியில் ‘டூரிஸ்டர்-பேமிலி’ ரிலீசாகியுள்ள தியேட்டரில் நடிகை சிம்ரன் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்து திரையரங்குகளில் ‘டூரிஸ்டர்-பேமிலி’ என்ற திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த நடிகை சிம்ரன் உள்பட நடிகர்கள், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அதன்படி நேற்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகை சிம்ரன், இயக்குனர் அபீசான் ஜீவிநீத் உள்ளிட்டோர் ரசிகர்களை சந்தித்தனர்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகை சிம்ரன், இந்த படம் உங்களுக்கு பிடித்துள்ளதா? என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள் அனைத்து காட்சிகளுமே நன்றாக உள்ளது, அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர் என்று ஆரவாரத்துடன் பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து நடிகை சிம்ரன் மற்றும் நடிகர்களுடன் திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.


