தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 487 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார் அகாடமி – டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி மையத்தில் வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக டேக்வாண்டோ பயிற்சியாளர் பணியிடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள எஸ்.ராம் அரவிந்த் என்பவருக்கு டேக்வாண்டோ பயிற்சியாளருக்கான தற்காலிக பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஸ்டராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


