சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் தினமும் பன்னம்பாறை விலக்கு அருகே சாலை ஓரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் கொட்டப்படுகிறது. குப்பைகளை வளம் மீட்பு பூங்காவில் கொட்டி அங்கு மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மண்புழு உரம் தயாரிப்பதற்கான பணிகளை ஒவ்வொரு பேரூராட்சி நிர்வாகமும் செய்து வருகின்றன.
இந்நிலையில், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அவ்வப்போது தீவைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எழும் புகை மூட்டத்தால் சாத்தான்குளம் நாசரேத் சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். எனவே குப்பைகளை தீவைத்து எரிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் மீண்டும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும் போது அதிகமாக காற்று அடித்ததால் எழுந்த அடர்த்தியான புகை மூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு அந்தப் பகுதி முழுவதுமே புகைக்காடாக காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் மட்டுமின்றி பன்னம்பாறை விலக்கு வள்ளியம்மாள்புரம், அருவிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பைகளை அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் குப்பைகளை எரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்…


