தூத்துக்குடியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆம் நாள் உயிரோடு எழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில், பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான ஸ்டார்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து உலக அமைதி வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேப்போன்று, திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை ஆன்றனி புருனோ தலைமையிலும் ஈஸ்டர் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. மேலும், அந்தோணியார் ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்பட கிறிஸ்துவ ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், தூத்துக்குடியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயங்களில் அதிகாலையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.


