தூத்துக்குடி வட்டகோவில் சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகன் விஜய். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று விஜய் உள்பட அவரது நண்பர்கள் 7 பேர் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்று தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் தடுப்பணை மேல் ஏறி ஆற்று நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
தடுப்பணையில் ஆழம் அதிகமாக இருந்ததாலும் நீச்சல் தெரியாததாலும் விஜய் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனால் பதறிய மாணவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏரல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் நீரில் மாயமான விஜய்யை சடலமாக மீட்டெடுத்தனர். இது குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்க வந்த கல்லூரி மாணவர் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வாழவல்லான் தடுப்பணை பகுதிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குளிக்க வரும் நிலையில் ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


