திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாத உண்டியல் வருவாயாக ரூ. 4.64 கோடி ரொக்கம் மற்றும் 1.7 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், ரூ. 4 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரத்து 186 பணம், 1 கிலோ 740 கிராம் தங்கம், 30 கிலோ 450 கிராம் வெள்ளி, 55 கிலோ 310 கிராம் பித்தளை, 9.6 கிலோ செம்பு, 9.61 கிலோ தகரம் மற்றும் 1,530 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியைப் பார்வையிட்டனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


