தூத்துக்குடி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மதியம் ஒரு மணிக்கு மேல் ஆங்காங்கே கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் திடீரென சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த மழையால் சாத்தான்குளம் பஜார் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் சாத்தான்குளம் பஜார் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி விட்டபடி சென்றன.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியத்திற்கு மேல் பெய்த இந்த மழையால் பொதுமக்களும் வியாபாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


