வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது
இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், “வீடுகளில் மேற்கூரையில் சோலார் தகடுகளைப் பொருத்தி சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்கூரை சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு மின்சாரத் துறை சார்பில் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்பட்டு வருகின்றது.
மேற்கூரை சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து மின் வாரியத்திற்கு கிரிட் மூலம் திருப்பி அனுப்பும் போது அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணம் நெட்வொர்க் கட்டணம் ஆகும். இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்யுமாறு நீதி மன்றமும் ஏற்கனவே உத்திரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றமே தவறு என்று கூறியும் கூட இது போன்ற கட்டணம் வசூலிப்பதால் மின் நுகர்வோர்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு தங்களது கூடுதல் உற்பத்திக்கான கட்டமைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். மேலும் வீட்டின் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு அனுப்பும் போது அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை.
எனவே வீட்டு மேற்கூரை மின்சக்தி உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும், மற்றும் வீட்டின் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கப்பட்டால் அந்த மின்சாரத்திற்கான கட்டணத்தையும் வழங்க மின்சாரத் துறைக்கு ஆணையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


