முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சாத்தன் நாவல் விமர்சனம்
– எழுத்தாளர் சாந்தி பிரபு
பொன்சொர்ணா பதிப்பகம் – 8760970002
திருச்செந்தூர் அருகே இருக்கும் சாத்தான்குளம் பகுதியை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல் தான் சாத்தன். சாத்தான்குளம் புதிய பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருக்கும் பாப்பாத்திஅம்மன் கோயிலின் வரலாற்றை மிகவும் விறுவிறுப்புடன் எழுதி இருக்கிறார் ஆசிரியர்.

கோயில் கொடை திருவிழாவில் ஊர் பெருமக்கள் ஒன்று கூடி கோயில் வரலாற்றினை சுவை குன்றாமல் பழமை மாறாமல் அங்கே தரிசனத்திற்காக வருகை தந்திருக்கும் பொதுமக்களிடம் விவரமாகக் கூறுவது போல முத்தாலங்குறிச்சி காமராசு தனக்கே உரிய பாணியில் கதைக்கேற்ற சிறிய படங்களையும் அங்கங்கே அச்சிட்டு அழகாக நம் கண் முன்னர் புத்தக வடிவம் கொடுத்திருக்கிறார்.
புதையலுக்காக ஆசைப்பட்டு நிறைமாத கர்ப்பிணியை நரபலி கொடுக்கும் காட்சிகள் மற்றும் அதன் பின்னர் அனுபவிக்கும் விளைவுகளையும் எழுதி இருக்கும் தொடக்கம் திடுக்கிடும் காட்சிகளை நம் முன் ஒரு திரைப்படம் போல விவரிக்கிறது.
சாத்தன் சாம்பவனின் வீரதீர பராக்கிரமங்களை விவரிக்கும் இடங்களில் எழுதப்பட்டிருக்கும் வேகமானது நம் கண் முன்னர் ஒரு மாமன்னரின் உருவத்தை பிரதிபலிக்கிறது.
அதே மன்னரானவர் ஒரு பூலோக ரம்பை போன்ற திருவிதாங்கூர் கணக்குபிள்ளையின் மகள் பாப்பாத்தி இடம் காதல் வயப்படும் பொழுது அந்த காலத்து கருப்பு வெள்ளை திரைப்படங்களின் அனுபவப்பூர்வமான மாற்றத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல வயது முதிர்ந்தவர்களின் அனுபவத்தினை உணர மறுக்கும் இளைஞர்களின் போராட்டங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு ஒரு சிறிய அத்தியாயத்தில் படம் பிடித்து காட்டி இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
சாத்தான் சாம்பவனுக்கும் பால சாம்பவனுக்கும் இடையிலான நட்பின் ஆழத்தை பாலசாம்பவனின் தரப்பிலிருந்து மிகவும் அழுத்தமாகவும் பக்குவமாகவும் விவரித்து இருப்பது வள்ளுவரின் ‘நட்பதிகாரத்திற்கு’ சிறந்த சான்றாகும்.
ஆசிரியர் எழுதியிருப்பது போலவே பண்டைய காலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள் எல்லாம் இன்னும் பரவலாக சில இடங்களில் அதன் வேர்களை மனதில் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு ஜாதியினத்தவரின் மனோபாவத்தையும் குணாதிசயங்களையும் உள்ளதை உள்ளவாரே பிரதிபலித்து காட்டிருப்பது ஆசிரியரின் துணிச்சலான முயற்சியைக் காட்டுகிறது.

சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் நடந்தசம்பவம், அதற்காக சாத்தான்குளத்தில் இருக்கும் நடுகல் , கோயில் கொடை விழா இவையெல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது ஒரு உண்மை சம்பவம், எழுத்தாளரில் எண்ணத்தில் நாவலாக விரிந்து பார்ப்போரை மெய்மறக்க செய்கிறது.
சினிமா காரர்கள் படித்தால், நிச்சயம் இந்த நாவல் திரைப்படமாகும் என்பதில் சந்தேகமில்லை. படங்களை வரைந்த ஓவியர் நாவலுக்கு உயிரோட்டத்தினை கொடுத்துள்ளார். வரலாற்று நாவலை படிக்க விரும்புவர்கள் நிச்சயம் இந்த நாவலை கொண்டாடுவார்கள்.


