தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம், தாதன்குளம் கிராம ஊராட்சிகளில் தினமும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஐஸ்வர்யா நேரில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார்.
முதலில் கருங்குளம் ஊராட்சிகளில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கும் கூடத்தை பார்வையிட வருகை தந்தார். அங்கு பணியில் இருந்த குப்பைகள் சேகரிப்பவர்களை சந்தித்து குப்பைகளை பொதுமக்களிடம் வீடுகளில் எப்படி சேகரித்து பெற வேண்டும், மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை தனியாக பிரிப்பது குறித்து விளக்கமளித்து கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து டன் கணக்கில் சேகரித்து வைத்து விற்பனை செய்யாமல் உள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கருங்குளம் ஊராட்சியில் குப்பைகளை அள்ளிச் செல்ல டிராக்டர் வாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் குப்பைத் தொட்டியில் மக்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அள்ள உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து கருங்குளம் ஊருக்குள் சென்று வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வீடுகளில் தனித்தனியாக குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் அப்படி குப்பைகளை தனியாக முறையாக பிரித்து வழங்கும் வீடுகளுக்கு குலுக்கல் முறையில் மாதம் தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்குவதாக கூறி உற்சாகப்படுத்தினார்.


