தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.1,963 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்துக்கான 2025- 2026-ம் ஆண்டின் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை தாங்கி, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார்.
அப்போது, தமிழகத்தின் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் 2025- 2026-ம் ஆண்டில் ரூ.20011.80 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து உள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த திட்டம் விளக்குகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ.3591.97 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.3181.89 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.1135.18 கோடி விவசாய இதர கடன்கள் ரூ.1963.07 கோடி என விவசாயிகளுக்கு மொத்த கடன் மதிப்பீடு ரூ.9872.11 கோடியாகும். சிறு, குறு நடுத்தரத் தொழில் கடன் ரூ.6005.90 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.3001.45 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ.215.24 கோடி, சுய உதவிக்குழுக்கான கடன் அளவு ரூ.917.10 கோடி என மொத்தம் ரூ.20011.80 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் போன்ற விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் மல்லிகா, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) சுவர்ணலதா மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


