தூத்துக்குடியில் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட 12 ம் வகுப்பு மாணவிக்கு முடநீக்கியல் துறை மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு மாணவி தடையின்றி பொதுத்தேர்வு எழுத உதவினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை பகுதியில் ஏராளமான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 23ம் தேதி மாலை 12 ம் வகுப்பு மாணவி ஜான்சி ரியா (17),சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அவருக்கு வலது காலில் மிகவும் மோசமான நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டியிருந்ததால் அன்றைய தினம் 23ம் தேதி இரவோடு இரவாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சிவக்குமார் அறிவுரையின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், நிலைய உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, முன்னிலையில் எலும்பு முறிவு முடநீக்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பாவலன் மேற்பார்வையில் எலும்பு முறிவு மருத்துவர்கள் சுதர்சன், பிரபு அலாய் மயக்கவியல் துறை மருத்துவர்கள் பலராம கிருஷ்ணன், சுகிர்தராஜ் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.
உடல் நலம் தேறிய அந்த மாணவி நேற்று வெற்றிகரமாக அவரது 12ஆம் பொது தேர்வை பள்ளிக்கு சென்ற எழுதினார். துரித கதியில் அவசர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து தேர்வுக்கு வழி செய்து மாணவியின் எதிர்காலத்தை காப்பாற்றிய மருத்துவர் குழுவை அனைவரும் பாராட்டினர்.


