தூத்துக்குடியில் அரசு டவுன் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர், செல்வ நாயகபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்தார். புதிய துறைமுகம் சென்றுவிட்டு கேம்ப் 1 வழியாக முத்துநகர் சந்திப்பு புதிய பாலம் கட்டுமிடத்தில் பஸ் திரும்பும் போது வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலையத்தில் பஸ் டிரைவர் செல்வ குமார் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த வட மாநில வாலிபரை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


