மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையை தரை தளத்திற்கு மாற்றக்கோரி செய்துங்கநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறை முதல் தளத்தில் உள்ளது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க வரும் மாற்றுத்திறனாளிகள் 20க்கும் மேற்பட்ட படிகள் ஏறிச் சென்று பார்க்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மாற்றுத்திறனாளிகள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் செய்துங்கநல்லூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் பதாகைகள் ஏந்தியபடி புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையை முதல் தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அதோடு 100 நாள் வேலையில் 4 மாதங்களாக வழங்காமல் உள்ள ஊதியத்தையும் உடனடியாக வழங்க கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதை உடனடியாக சரி செய்து தரவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அழைத்து வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.


