தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் சங்கம் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அப்பாத்துரை தலைமையில் தொழிலாளர்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் “தூத்துக்குடி நகரத்தில் துறைமுக வளாகத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என்.டி.பி.எல்.,அனல் நிலையம் இயங்கி வருகிறது. இம்மின் உற்பத்தி நிலையம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 89 சதவீதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் விநியோக கழகம் 11 சதவீதம் என இணைந்து கூட்டு நிறுவனமாக (NTPL) செயலாற்றி வருகிறது.
இம்மின் நிலையம் 1800 கோடி திட்ட முதலீட்டில் அமைக்கப்பட்டு 2015ம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு இளைஞருக்கு கூட நிரந்தர பணி வாய்ப்பு வழங்காமல், நியமனம் செய்யாமல் 1380 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு என்.டி.பி.எல்., அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.
NLC அனல் மின் நிலையத்தில் இருந்த 200 ஊழியர்கள் டெபுடேஷன் முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். என்.டி.பி.எல்.,நிர்வாகம் பாரத அரசால் நவரத்னா அந்தஸ்து பெற்ற முன்னுதாரண நிர்வாகம். 1800 கோடி முதலீட்டில் தூத்துக்குடி போன்ற பின்தங்கிய பகுதியில் அனல் மின் நிலையம் அமைத்து 220 ஊழியர்களை மட்டும் நிரந்தர ஊழியர்களாகவும் 1380 ஒப்பந்த தொழிலாளர்களை மிக குறைந்த ஊதியத்தில் பயன்படுத்தி 1000 மெகா வாட் மின் உற்பத்தியில் ஈடுபடுவது பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் இயற்கை நீதிக்கும் முரணானது.
ஒப்பந்த தொழிலாளர்கள் எந்தவித உரிமையும் இன்றி பணியாற்றி வரும் நிலையில் தூத்துக்குடி என்.டி.பி.எல்.,அனல் மின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு NLC அனல் மின் நிலையத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க சிஐடியு தொழிற்சங்கம் கடந்த 19.05.2019 அன்று வழக்கு தொடர்ந்தது.
நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிக்கு அமர்த்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எங்கள் சங்கம் சார்பாக தொடர்சியாக பல கோரிக்கைகள் என்.டி.பி.எல்., நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு மண்டல தொழிலாளர் ஆணையாளர் (நடுவண்) RLC முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மதுரையிலும், தூத்துக்குடி முகாம் அலுவலகத்திலும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியம், அடிப்படை வசதிகள், தேசிய, பண்டிகை விடுமுறை குறித்தும் நடைபெற்று உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களை மின் உற்பத்தியில் பணிக்கு அமர்த்தவில்லை என என்.டி.பி.எல்.,நிர்வாகம் வாதடிய போது கடந்த 15.04.2021 அன்று துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் (Deputy Chief Labor Commissioner) அவர்கள் சென்னையில் இருந்து நேரடியாக அதிரடி ஆய்வு செய்து கடந்த 30.04.2021 அன்று என்.டி.பி.எல்., அனல் மின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு NLC அனல் மின் நிலையத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க உத்திரவிட்டார்.
என்.டி.பி.எல்., நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டில் இடைக்கால நிவாரணமாக ரூ,100- தினசரி வழங்க உத்திரவு பிறப்பித்தது. என்.டி.பி.எல்., நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடைக்கால நிவாரணம் கொடுக்க முடியாது என தடை உத்திரவு பெற முயற்சித்தது. சென்னை உயர் நீதி மன்றம் தடை வழங்க மறுத்து வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இடைக்கால தீர்ப்பு வழங்க உத்திரவிட்டது நீதி மன்றம்.
இந்நிலையில் என்.டி.பி.எல்.,அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக கடந்த 13.02.2023 முதல் வேலை நிறுத்தம் செய்தனர். பேச்சு வார்த்தையில் தினசரி அலவனஸ் என ரூபாய் 82/- வழங்க நிர்வாகம் ஏற்று கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. நீதி மன்ற தீர்ப்பு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் படி துணை தலைமை தொழிலாளர் ஆணையரின் (DCC) (நடுவண்) 30.04.2021 தேதியிட்ட உத்திரவு செல்லதக்கது என தீர்ப்பளித்து என்.டி.பி.எல்.,நிர்வாகம் செய்த மேல் முறையீட்டை ரத்து செய்துள்ளது. 15.06.2022 அன்று வட்டாச்சியர், துாத்துக்குடி முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும், என்.டி.பி.எல்., அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான வேலை நிறுத்தத்தையொட்டி கடந்த 20.02.2023 அன்று துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (DCC) (நடுவண்) முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் நீதி மன்ற தீர்ப்பு அடிப்படையில் புதிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி துணை தலைமை தொழிலாளர் ஆணையரின் (DCC) (நடுவண்) 30.04.2021 தேதியிட்ட தீர்ப்பை அமல்படுத்த மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


