தூத்துக்குடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை தீபா சங்கர் கலந்து கொண்டு சாதனை படைத்த மகளிருக்கு விருதுகளை வழங்கினார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 13ஆம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. மகளிர் அமைப்பு செயலாளர் ஸ்ரீமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் பி.ராஜம் தலைமை தாங்கினார். பேராசிரியர் சங்கர் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கினார்.
விழாவில் எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார், கைம்பெண்கள் மற்றும் ஆதரற்றோர் மகளிர் நலவாரிய தலைவர் வழக்கறிஞர் எஸ்.சொர்ணலதா, டாக்டர் எஸ்ஆர்பி கண்ணன், பேராசிரியை பாத்திமா பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர்கள் கற்பகவல்லி, எஸ்எஸ் சுகந்தி, பசுமை ஆர்வலர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மல்யுத்தம் ஸ்வேதா, கிராமியக் கலைஞர் தியா, வில்வித்தை புவனேஸ்வரி, கணிப்பொறியாளர் கவிதா உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் வெற்றி செல்வன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்ட பொருளாளர் ஆனந்த், இணை செயலாளர் பீட்டர், செயற்குழு உறுப்பினர் பொன்னம்பலம், பெத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


