நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பாப்பாக்குடி அ.முருகன் அவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாப்பக்குடியில் வசித்து வரும் இவர் தமிழ் நாடு அரசுபோக்குவரத்துக் கழகத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 66 வயதுகொண்ட இவர் பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை நிறுவனர். இவர் பாவலர் நெல்லை குமாரசுப்பிரமணியம் அவர்களை ஆசானாக கொண்டு மரபுக் கவிதை உருவாக்குவதில் வல்லவர். இவர் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். பாரதி விருது, குறளரசு விருது, கவிக்கம்பர் விருது, பாரதிதாசன் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, சுரதா விருது, சென்னை மாநகர திழ் சங்க விருது, உலக திருக்குறள் ஆய்வு மைய விருது, மதுரை மாநகர கவிஞர் மன்ற விருது, காமராசர் விருது உள்பட சுமார் 180 விருதுகளை பெற்றுள்ளார்.
கவிதை, கதை ,கட்டுரை, பாட்டு எழுதுதல் ,படித்தல், நடித்தல், கவியரங்கத் தலைமை, நடுவர் ,பட்டிமன்றத் தலைமை, தனிச் சொற்பொழிவு, வழக்காடு மன்றம், சுழலும் சொல்லரங்கம் ஆகியவற்றில் பங்கெடுத்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகள் படைத்தல் மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு தமிழ்ச்செம்மல் விருதை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமி நாதன் சென்னையில் வைத்து வழங்கினார். தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் அருள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


