திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது. 11-ம் திருநாளான 13-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.


