தூத்துக்குடியில் சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தனது அண்ணனின் நண்பரான ஆத்தூரை சேர்ந்த விமல் என்பவருக்கு சொந்தமான காரை ஓட்டி வந்தார். காரில் அவரது நண்பர் விஜயகுமார் என்பவரும் உடன் வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம், அம்பேத்கர் சிலை அருகே வரும்போது கார் இன்ஜினியிலிருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து அவர் காரை உடனடியாக நிறுத்திவிட்டு பார்த்தபோது கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 75% கார் தீப்பிடித்து எறிந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


