தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் பிப்.21ம் தேதி தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளன்று, அவரவர் தாய்மொழிகளை, வரும் ஆண்டிலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழி அனைத்து மொழி மக்களாலும் ஏற்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதில், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


