முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் நடிகரும் திரைப்பட பாடலாசிரியருமான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.
பாடலாசிரியர் பா.விஜய் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆட்டோகிராப் திரைப்படத்தில் தான் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்தார் பாடலாசிரியர் பா.விஜய். கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த பாடலாசிரியர் பா.விஜயுடன் பக்தர்கள், பொதுமக்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.


