திமுகவோ, தமிழக அரசோ, மக்களை எந்த ஒரு மொழியையும் படிக்க கூடாது என்று சொல்லவில்லை. மொழி திணிப்பதைதான எதிர்க்கிறோம் என்று கனிமொழி எம்பி விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித் தொகை வழங்கும் விழா இன்று தூத்துக்குடி மாநகராட்சி மாநாடு மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்களையும், ஓய்வுபெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதியில் இருந்து வட்டித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “அமைச்சர்கள் குடும்பத்தினர் மூன்று மொழி படிக்க வேண்டும், ஏழை குடும்பத்தினர் மூன்று மொழி படிக்க தடையா? என அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “யாரும் எந்த மொழியையும் படிக்கக்கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ, தமிழ்நாடு அரசோ, தமிழக மக்களோ எந்த மொழியும் படிக்க கூடாது என்று சொல்லவில்லை.
ஒரு மொழி திணிப்பு என்று வரும்போது அதனை எதிர்க்கின்றோம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழியை ஒரு சாய்ஸாக படிக்க வேண்டும். மொழியை திணித்து படிக்கும் போது, வேறு வழியில்லாமல் படிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது இருக்கக்கூடிய வித்தியாசங்களை பிஜேபி முறையாக புரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வரும்போது கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் மொழி சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டு இருக்கிறது. சமஸ்கிருதம் படிக்கும் போது என்ன பயன் என்று நாம் கேட்கலாம். இவ்வாறு மொழி திணிப்பு, ஆதிக்கத்தினுடைய திணிப்பு இதையெல்லாம் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்றார்.
இந்நிகழ்வில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கூடுதல் தலைமை பொது மேலாளர் விஜயகுமார் மற்றும் துறைசார் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


