தென் மண்டல அளவிலான ஐ.டி.ஐ.களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர்கள் தொடர் ஓட்டம் மற்றும் கால்பந்து போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
தென் மண்டல அளவிலான அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வைத்து மூன்று நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 73 ஐ.டி.ஐ. மாணவர்கள் சுமார் 650 பேர் பங்கேற்றனர்.
இதில் தடகளம், வாலிபால், கைப்பந்து, பூப்பந்து, பேட்மிட்டன் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளில் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர்கள் 4X100 தொடர் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்று தங்க பதக்கம் பெற்றனர். மேலும் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர்.
சாதனை படைத்த நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஜெபராஜ், ஸ்டாலின் ஆகியோரையும் ஓய்வுபெற்ற நீதிபதியும் நாசரேத் ஆர்ட் ஐ.டி.ஐ. யின் தாளாளருமான முருகையா, முதல்வர் ஜான்சன், தொழிற் பயிற்சிமைய மேலாளர் டேனியல், ஆசிரியர்கள் நவமணி, பிரவின், ஆல்வின், தலைமை கணக்காளர் ஆசீர் பெஞ்சமின், மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.


