நாலாட்டின்புத்தூர் அருகே குடும்ப பிரச்சினையில் கோழிப்பண்ணை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டி திருவேங்கடம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (55). கோழிப்பண்ணை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயராணி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெயராஜூக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலையில் கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயராஜ் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து ஊருக்கு அருகே உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அந்த தோட்டத்திற்கு சென்று, ஜெயராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


