ஆறுமுகனேரியில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி கீழநவலடிவிளையைச் சேர்ந்தவர் லெட்சுமி (62). இவரது கணவர் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் சித்ரா, திருமணமாகி விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இதனால், வீட்டில் தனியாக இருந்த லெட்சுமி, சம்சா வியாபாரம் செய்துவந்தார்.
வீட்டின் ஒரு பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சு. பாலமுருகன் (39) குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், லெட்சுமி கொலையுண்டு கிடந்தது ஜன. 29ம் தேதி தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், ஆறுமுகனேரி ஆய்வாளர் சேக் அப்துல்காதர், உதவிஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனிடையே, பாலமுருகன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவருக்கும், சக தொழிலாளியான தூத்துக்குடி சோட்டையன்தோப்பில் வசித்துவரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த ச. சபரிமைந்தன் (31) என்பவருக்கும் இக்கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
பாலமுருகன் நாள்தோறும் சபரிமைந்தன் உள்ளிட்ட சிலருடன் வீட்டில் மது குடிப்பாராம். இதை லட்சுமி கண்டித்ததுடன், வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால், இருவரும் கடந்த 27ஆம் தேதி லெட்சுமியிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, அவரை மிதித்துக் கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


