பட்டினமருதூரில் கணப்படுவது வாதாபி விநாயகர் சுதைச் சிற்பமா என ஆய்வு நடத்த வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு விவரத்தில் வரிசை எண் 10, 11, 12, 13, 14 ன் படி ‘மா எண் ஐவர் வுடை கோஞ்சடே ரொடு ஆசய மாசடை மக கிருவீ’ என்ற வரிகள் ‘பெரும் மதிப்பு கொண்ட பாண்டியர் கோஞ்சடே சமாதி யாக சிவனின் மகனுடன் உறைவிடம் கொண்டு இணைந்து(கிருவீ) அருள்பாலிக்கிறார்’ என்ற பொருள் படுகிறது
இதனை உறுதி படுத்தும் விதமாக நாம் ஏற்கனவே கண்டெடுத்து ஆவணப்படுத்தி உள்ள வீரக்கல்லில் காணப்படும் வலஞ்சுழி விநாயகர் சிற்பமும், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட வீரபாண்டி விநாயகர் ஆலயத்தில் காணப்படும் வலஞ்சுழி விநாயகர் சுதை சிற்பமும் அமைவது குறிப்பிடதக்க அம்சமாகும். எனவே வீரக்கல்லில் குதிரை மீது அமர்ந்து இருக்கும் மன்னன் பாண்டியர் கோஞ்சடே(பொ.ஊ.670 – 710) என கருதிடலாம்.
அதேபோன்று இந்த சிறிய வலஞ்சுழி விநாயகர் சுதை சிற்பமும் வாதாபி யுத்தம் (பொ.ஊ.642) வெற்றிக்கு பின் பரஞ்சோதி (சிறுத்தொண்டர்) நாயனார் கவர்ந்து வந்த வாதாபி விநாயகர் எனவும் கருதலாம் அல்லவா? அவ்வாறு உறுதி செய்யப்படும் பட்சத்தில் பல்லவர்கள் ஆட்சியின் நீட்சிகள் இப்பகுதிவரை இருக்கலாம் என்பதும், இந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 400மீட்டர் தொலைவில் மண்ணில் புதையுண்டுள்ளதாக தென்படும் ஆலய வளாகம் மகாபலிபுரம் போன்ற கடற்கரை கோயிலாகவே இருக்கவேண்டும் என்பதும், இந்த வீரக்கல்லில் குதிரை மீது அமர்ந்து இருக்கும் மன்னனின் சிகை அலங்காரம் அமைப்பு பல்லவர்களின் முதலாம் நரசிம்மவர்மன் சாயலாக இருக்க வாய்ப்பு மிக அதிகம்.
கூடுதல் சான்றாக இப்பகுதியில் உள்ள கல்மேடு (கல்மடு) கிராமம் அணைக்கட்டின் சுற்று சுவரின் பராமரிப்பு பணியின் போது மண்ணில் கீழே சுமார் 5அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட புதைந்துள்ள சுமார் 200அடி நீளம் கொண்ட மதில் சுவரிலும் பல்லவர்கள் காலத்தின் கட்டுமான சாயல் உள்ளன. இது தொடர்பாக சிறப்பு கோரிக்கைகள் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.


