தூத்துக்குடி மாவட்டம் நாரைகிணறு அருகில் உள்ள அயிரவன்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர், மனைவி முருக லட்சுமியுடன் அரசன்குளம் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் சுரேந்திரன் (4). கடந்த சில மாதங்களாக செல்லத்துரை அயிரவன்பட்டியில் புதிய வீடு கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்த நிலையில் இன்று காலையில் புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடந்தது.
இந்த நிலையில் மதியம் சுமார் 3 மணியளவில் செல்லத்துரையின் சகோதரர் கார்த்திக் என்பவர் சுரேந்திரனை மோட்டார் பைக்கில் அழைத்து கொண்டு அயிரவன்பட்டி கிராமதெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் பொன்ராஜ் என்பவர் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக்கில இருந்த சிறுவன் சுரேந்திரன் கீழே விழுந்துள்ளான்.
அப்போது டிராக்டரின் டயர் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சுவீந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக டிராக்டர் ஓட்டி வந்த கோபாலபுரம் கிராமம் வடக்கு தெரு கனகராஜ் மகன் பொன்ராஜ் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


