ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கிராமப்புற பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் பெண்களுக்கு டெலஸ்கோப் அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அஸ்ட்ரோகிளப் துவக்கப்பட்டு அதன் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி,ஸ்கோப் பெஸ்டிவல், நிலா திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக 5000 இடங்களில் அஸ்ட்ரானமி எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் கிராமம் மற்றும் நகரங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை கொண்டு செல்கிறது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், மிளகுநத்தம், கிராமங்களில் நடந்த டெலஸ்கோப் அறிமுக நிகழ்ச்சியில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பெண்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இதில் வானில் இரவில் தெரியும் கோள்கள் நட்சத்திரங்களை கண்டு மகிழ தெரிவிக்கப்பட்டது. கோள்கள் பற்றிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிடுவது குறித்தும், டெலஸ்கோப் பயன்பாடு, கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானியல் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.


