தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி பொறுப்பேற்றுள்ளார். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு புதிய மேலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிக்கவும், தேர்தலை நடத்தவும், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிஜோதி மணி திருமண்டல நிர்வாகியாக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் பல்வேறு பணிகளை கவனிக்க புதிய மேலாளர்களை நியமித்துள்ளார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை யொட்டி, திருமண்டலத்தின் அன்றாட பணிகளை கவனிக்கவும், திருமண்டல தேர்தலை நேர்மையாக நடத்திடவும், உயர்நீதிமன்றத்தால் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் திருமண்டல நிர்வாகியாக பொறுப்போற்றார். இதனைத் தொடர்ந்து திருமண்டல நிர்வாகம் செம்மையாக நடைபெற புதிய நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளார்.
அதன்படி, நீதிபதி ஜோதிமணியின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜான் ஆர்.டி. சந்தோஷம், ரெத்தினராஜ், நீதிபதியின் தனி செயலாளராக கருணாகரன், திருமண்டல நிதி ஆலோசகராக அன்பர் தாஸ், திருமண்டல மேல் நிலை, உயர்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளர் மற்றும் தாளாளராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முருகையா, திருமண்டல கல்லூரிகளை நிர்வகிக்க மேலாளர் மற்றும் தாளாளராக வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ், திருமண்டல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் மற்றும் தாளாளராக வழக்கறிஞர் பாரி, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களின் மேலாளராக தனராஜ் சாமுவேல் உள்ளிட்டோரை நீதிபதி ஜோதிமணி நியமித்துள்ளார்.
நீதிபதி ஜோதிமணி ஏற்கனவே திருநெல்வேலி திருமண்டலத்தின் நிர்வாகியாக இருந்து சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி பொறுப்பேற்றுள்ள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி விரைவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இதேபோன்று திருமண்டலத்தில் ஆன்மிக பணிகளை மேற்கொள்ள கன்னியாகுமரி பேராயர் செல்லையா தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயராக உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும், பொறுப்பு பேராயராக பொறுப்பேற்றுள்ளார்.


