கயத்தாறு அருகே மேலும் 2 கோவில்களில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் ஊருக்கு வடக்கே வெயிலாட்ச்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் இரும்பு கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள உண்டியலில் இருந்த அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் காசு பணங்களை திருடிக் சென்றனர்.
அதேபோல் அன்று இரவில் ஊருக்கு கிழக்கே உள்ள புது வீட்டு அம்மன் திருக்கோவில் சென்று அங்குள்ள கோவில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் உள்ள தாலியை திருடிக் சென்றனர். இந்த இரண்டு கோவிலிலும் தலா நான்கு கிராம் எடை கொண்ட தாலியை எட்டு கிராம் தங்கத்தாலியை திருடிச் சென்றனர். மேலும் புது வீட்டு அம்மன் கோயில் முன்பு உள்ள சில்வர் குடத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் திருடிச்சென்றுள்ளனர்.
இந்த கோவில்களுக்கு அதிகாலை பூஜை செய்யசென்ற பூசாரி கோவில் பூட்டு உடைத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருடுபோயிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் கோவில் தர்மகர்த்தா துரைப்பாண்டியன், நாட்டாண்மை தங்கப்பாண்டியன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் கயத்தாறு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் தடயவியல் அலுவலர்கள் கைரேகை பதிவுகளை எடுத்தனர். சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப் பதிந்து செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். கயத்தாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


