குளத்தூர் அருகே கண்மாயில் தண்ணீர் குடிக்க வந்த மான் இறந்த கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மான் பூங்கா உள்ளது. நூற்றுக் கணக்கான மான்கள் அங்கு உள்ளன. இந்த மான் பூங்காவில் இருந்து அவ்வப்போது மான்கள் தப்பி சென்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் கண்மாய் அருகே ஒரு மான் இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து கிராம மக்கள் குளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் வந்து மானை சோதனை செய்தனர். உயிரிழந்து கிடந்த மானுக்கு 2 வயது இருக்கும். கண்மாயில் தண்ணீர் குடிக்க வந்தபோது ஏதேனும் விலங்கு துரத்தியபோது கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்றும், மான் உடம்பில் எந்தவித காயமும் இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இறந்த மானின் உடலை பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


