தூத்துக்குடியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நெல்லை, தென்காசி மாவட்ட அணி வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து கடந்த 3 நாட்களாக தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தென்மண்டல அளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, மற்றும் துறை ரீதியான பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி தூத்துக்குடி, விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 7 அணிகளின் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நெல்லை, தென்காசி மாவட்ட அணி வீரர்கள் பெற்றனர்.
இரண்டாவது இடத்தை கன்னியாகுமரியும், மூன்றாவது இடத்தை தூத்துக்குடி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வெற்றி பெற்ற அணிகளுக்கு தீயணைப்புத்துறை துணை இயக்குனர்கள் சரவண பாபு, தென்மண்டல மதுரை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவிலான தீயணைப்புத்துறை வீரர்களுக்கு இடையிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.


