தூத்துக்குடி சிவன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்திர தீபம் ஏற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்திர தீப விழா நடந்தது. இதையொட்டி காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. பின்னர் தெப்பக்குளத்தில் இருந்து தீர்க்கவாரி எடுத்து வந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் மற்றும் தீபாரணை நடந்தது. மாலையில் கோவில் பிரகாரம் முழுவதும் பத்திர தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் அருள்மிகு சங்கரா ராமேஸ்வரர், அன்னை ஸ்ரீ பாகம் பிரியாள், சுப்ரமணியர், விநாயகர், சண்டேஸ்வரர் ஆகியோர் தனித்தனியாக வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். அதன்பின் பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்கார தீபாரணை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் கோவிலில் இருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. சிறப்பு பூஜைகளை பிரதான பட்டர் செல்வம் தலைமையில் சிவாசிரியர்கள் செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


