தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜீ(58). இவர் கடந்த 10ம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
அதற்கு முன்னதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பணி மாறுதல் பெற்று சாத்தான்குளத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று மாலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக சக காவலர்களிடம் கூறியுள்ளார் ராஜி. உடனே பணியில் இருந்த காவலர்கள் அவரை அவரது சொந்த காரில் அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்க்காக அவரது சொந்த காரிலேயே அமர்ந்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே சொந்த காரிலேயே நெஞ்சுவலியால் அவரது உயிர் பிரிந்தது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் காவல் ஆய்வாளர் ராஜிக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இன்று கடைசியாக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து விட்டு செல்ல இருந்த நிலையில் பரிதாபமாக நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
உயிரிழந்த காவல் ஆய்வாளர் ராஜீன் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம். இவருக்கு துரைச்சி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.


